• Wed. Dec 11th, 2024

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு…..

ByKalamegam Viswanathan

May 17, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த இரண்டு வாரங்களாக சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று மாலை ஸ்ரீபத்திரகாளியம்மன் எழுந்தருளிய பெரியதேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து தேரில் வீற்றிருந்த ஸ்ரீபத்திரகாளியம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததையடுத்து இன்று அதிகாலை ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சித்திரை திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. இன்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் – ஸ்ரீமாரியம்மன் இருவரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.