• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -சிவகங்கை மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கடந்த சில வாரங்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி கொலை சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். இதையடுத்து அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்புக்கு பெயர்போன திருப்பாச்சியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரிக்கும் பட்டறைத் தொழிலாளர்களை அழைத்து, திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி சுந்தரமாணிக்க உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கலந்துகண்டு பேசியனார். அப்போது அவர், “சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இச்சம்பவங்களில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். இவர்கள் கத்தி, வாள், அரிவாள், வீச்சரிவாள் உள்ளிட்ட கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். இனிமேல் விவசாயம், வீட்டுத் தேவைகள் உள்ளிட்ட பணிகளுக்கு அரிவா ள், கத்தி உள்ளிட்ட தயாரித்துக் கொடுக்குமாறு பொதுமக்கள் கேட்டால் அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை வாங்கிக் கொள்ளவேண்டும். கொலைக் குற்றங்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை தயாரித்து கொடுத்தால், தயாரித்துக் கொடுக்கப்படும் தொழிலாளர்கள் மீது கடும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றவாளிகள் ஆயுதம் தயாரித்துக் கொடுக்குமாறு மிரட்டினால் அவர்கள் குறித்து என்னிடமும், அந்தந்த பகுதி காவல் நிலையங்களிலும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், இனிவரும் நாட்களில் ஆயுதங்கள் தயாரிக்கப்படும் பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 122 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 160 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்கள் குறித்த விசாரணையில் உண்மை தெரியவந்தால் ஆயுதம் தயாரித்துக் கொடுத்த தொழிலாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.