கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் வரும் வெள்ளிக்கிழமை முழுநேர கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.
மதுரையில் வணிகர்கள் நடத்தும் கடை அடைப்பு போராட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் பேட்டி..,
வாடகை கடையில் வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரியும், மதுரை மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் வரும் வெள்ளிக்கிழமை முழுநேர கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், ஆலோசகர் ஜெயபிரகாசம், ஒருங்கிணைப்பாளர்கள் பழனிசாமி, திருமுருகன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2017-ல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதில் இருந்து பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்ய, இந்திய அளவில் மத்திய நிதித்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை பலமுறை சந்தித்து, பல்வேறு குழப்பங்களை நிவர்த்தி செய்துள்ளோம். சமீப காலமாக, பல்வேறு மாறுதல்கள் ஜி.எஸ்.டி.யில் வந்து விட்டது. மாதம் ஒரு மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதனால், சிறு வணிகர்களும், தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கடந்த 10-10-2024 முதல், வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள், ஆண்டுக்கு ரூ.1½ கோடி வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த தீர்மானத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
தமிழகத்தில் எங்களின் போராட்டத்ற்கு 37 நகரங்களில் இருந்து, பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மதுரையில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மற்ற சங்கங்களும் எங்களிடம் பேசி வருகிறார்கள். தற்போது வரை கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட சங்கங்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எங்களின் போராட்டம், மத்திய அரசையோ, மாநில அரசையோ எதிர்த்து கிடையாது. ஜி.எஸ்.டி. கவுன்சிலில், மாநில அரசுகள் பேசி, 10-10-24- முதல் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். அதற்காகத்தான் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். இந்தியாவில், 70 முதல் 75 சதவீதம் சிறுவணிகர்கள் தான் இருக்கிறார்கள். உதாரணமாக, கீழமாசி வீதி, மேலமாசி வீதியில் 10 சதவீதம் பேர் மட்டுமே மொத்த வியாபாரிகள், மற்றவர்கள் சிறு வணிகர்கள். இந்த புதிய நடைமுறையால் சிறுவணிகர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
ஜி.எஸ்.டி.யில் கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறையை ரத்து செய்யக்கோரி, 37 மாநிலங்களில் உள்ள நிதி மந்திரிகளுக்கும் தபால் அனுப்பி இருக்கிறோம். அதில் 2 மந்திரிகள் எங்களுக்கு பதிலும் அனுப்பி இருக்கிறார்கள். இதுபோல், கடை அடைப்பு போராட்டத்திற்கு பின்னர் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து எங்களின் கோரிக்கை எடுத்துரைக்க இருக்கிறோம். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து சங்கங்களும், எங்களை போன்று போராட்டங்களை அறிவித்து வருகிறார்கள். நாங்கள் நெருப்பை பற்ற வைத்திருக்கிறோம். அது எரிந்துதான் ஆக வேண்டும். எனவே, வணிகர்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.