• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பொய்யான பாலியல் புகார் அளித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு..,

BySubeshchandrabose

Feb 25, 2026

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோகில பாண்டியன்.

இதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கில பட்டதாரி ஆசிரியை வனிதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராமலட்சுமி ஆகியோர் கோகில பாண்டியனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்து இருந்தனர்

நரியூத்து பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த நந்தினி என்பவரின் பெயரில், காமன் கல்லூர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன் மற்றும் அப்போதைய மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த மொக்கத்துரை ஆகியோருடன் சேர்ந்து கோகில பாண்டியனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் மனு அளித்தனர்

இதனால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி கடந்த 16.9.2016 ல் கோகில பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோகில பாண்டியன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீதிமன்ற உத்தரவின் படி விசாக கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகில பாண்டியனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் முன்விரோதம், பணிக் காழ்ப்புணர்ச்சி காரணமாக வனிதா மற்றும் ராமலட்சுமி ஆகியோர் திட்டமிட்டு பொய்யான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளதும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கோகில பாண்டியனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலகிக் கொள்ளப்பட்டு தற்காலிக பணிநீக்கம் காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்குமாறு அப்போதைய மாவட்ட கல்வி அலுவலரால் உத்தரவிடப்பட்டது.

கோகில பாண்டியனுக்கு எதிராக பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் போலியான ஆவணத்தை தயாரித்த குற்றத்திற்காக மேற்படி வனிதா, ராமலட்சுமி, ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை உட்பட ஒன்பது நபர்களுக்கு எதிராக ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் பாசில்முகமது 19.2.2026ல் குற்றம் செய்த நபர்களுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

அதன்படி மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியை வனிதா, ஆசிரியை ராமலட்சுமி ஆகிய மூவருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.

மற்றொரு மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ் என்பவருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.

மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் ஹெலன் மெட்டில்டா ஆகிய மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்துள்ளார்.

புகார்தாரரான வழக்கில் பாதிக்கப்பட்ட கோகில பாண்டியனுக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.