
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. டிக்கெட் விலை குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க சலுகைகளை கப்பல் நிறுவனம் அறிவித்தது.
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
வருடாவருடம் வானிலை மாற்றம் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் சுபம் நிறுவனத்தின் “சிவகங்கை” கப்பல் போக்குவரத்து சேவை நாகை துறைமுகத்தில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது. காலை 6:00 மணிக்கு துறைமுகம் வந்த பயணிகள் துறைமுக அலுவலர்கள் சோதனைக்கு பிறகு கப்பலில் ஏற்றப்பட்டனர். முன்னதாக கப்பலில் ஏறிய பயணிகளை ரோஜா பூ கொடுத்து கப்பல் நிறுவனத்தினர் வரவேற்றனர்.

நாகையிலிருந்து சிவகங்கை கப்பலில் 83 பயணிகள் இலங்கை சென்றுள்ள நிலையில், இன்று மதியம் இலங்கை காங்கேசன்துறையில் இருந்து நாகை புறப்படும் கப்பலில் 85 பயணிகள் இந்தியா வரவுள்ளனர். பயணிகளை கவரும் வகையில் இலங்கை செல்வதற்கு ஒரு வழி கட்டணமாக 4250 ரூபாயும், இருவழி கட்டணமாக 8,500 ரூபாய் எனவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் எடுத்துள்ள பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு இலவசமாக கப்பலில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயணிக்கு 10 கிலோ வரை இலவசமாக பொருட்கள் எடுத்து செல்லவும், கூடுதலாக லக்கேஜ் இருந்தால் அதற்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இந்தியா இடையே நல்லுறவு ஏற்படவே இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள கப்பல் நிறுவன இயக்குனர் சுபஸ்ரீ சுந்தர்ராஜ், விரைவில் 250 பேர் பயணிக்க கூடிய அதிவேக மற்றொரு கப்பல் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


