• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு

தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விபரம் வெளியாகிறது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உடலை வாங்கமாட்டோம் என மறுத்து 2015-ஜூன் 25 ஆம் தேதி கோகுல் ராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரண வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா 2015 செப்.15 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை சம்பவம் தொடர்பாக பலகட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் பள்ளியப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி இறந்துவிட்டனர்.

இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 116 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் பிப்.9 ஆம் தேதி முடிந்த நிலையில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கடந்த 5 ஆம் தேதி தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள். இந்த 10 பேருக்கான தண்டனை விபரம் வரும் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று காலை 11 மணிக்கு 10 பேருக்கான தண்டனை விவரங்களை அறிவிக்க இருக்கிறார். யுவராஜ், யுவராஜின் கார் ஓட்டுநர் அருண், குமார் என்கின்ற சிவக்குமார், சதீஷ்குமார், ரகு என்கின்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது.