• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆளுங்கட்சியினரால் மாற்று கட்சி கவுன்சிலர்கள் பழிவாங்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு…

ByKalamegam Viswanathan

Dec 12, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் சரி பாதி பெண் கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தராமல் அவர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்டங்களில் புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 7ந் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் சுமார் 55 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலக கூடுதல் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை மதுரை வந்திருந்தபோது காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சென்றார்.

அப்போது பேரூராட்சியில் கூடுதல் கட்டிடம் குறித்து கல்வெட்டுகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.

அதாவது கல்வெட்டுகளில் பெண் கவுன்சிலருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என புகார் தெரிவித்ததாகவும் இதனால் காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த கூடுதல் கட்டிடத்திற்கான கல்வெட்டுகள் வைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் கவுன்சிலர் மத்தியில் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் அதாவது எட்டாம் தேதி சோழவந்தான் பேரூராட்சியின் 12 வது வார்டு பெண் கவுன்சிலரான ரேகா ராமச்சந்திரன் கூடுதல் கட்டிட திறப்பு விழாவிற்காக தயார் செய்யப்பட்ட கல்வெட்டுகளில் தனது பெயர் இரட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.

அப்போது அங்கிருந்த பேரூராட்சி அதிகாரிகளிடம் கல்வெட்டுகளில் தனது பெயர் எவ்வாறு இரட்டடிப்பு செய்யப்பட்டது என்று கேட்ட நிலையில்,

ஒப்பந்ததாரர் தான் பெயரை தவறுதலாக எழுதி விட்டார் என பேரூராட்சி அதிகாரிகளும் ஒப்பந்தாரிடம் கேட்டபோது பேரூராட்சி அலுவலகத்தில் சொன்னதைத்தான் கல்வெட்டுகளில் எழுதினேன் என மாறி மாறி பேசியதால் விரக்தி அடைந்த கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாக கூறினார்.

இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பெண் கவுன்சிலருடன் வந்த அவரது
ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பணியாளர் இடம் இது குறித்து விளக்கம் கேட்க சென்றபோது நீ யார் விளக்கம் கேட்பது உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என ஒருமையில் கேட்டதாக தெரிய வருகிறது.

இதனால் கவுன்சிலர் உடன் வந்த அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினார்கள்

இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது உடனே உள்ளிருந்து வெளியில் வந்த அதிகாரிகள் பெண் கவுன்சிலரை சமாதானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர்

ஆனால் தனது பெயர் ரேகா ராமச்சந்திரன் என்று இருக்கும் நிலையில்,

ரேகா என வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யும் நோக்கத்துடன் ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் செய்யப்பட்டுள்ளதாகவும்,

மேலும் இதுவரைக்கும் உள்ள கல்வெட்டுகளில் பெயர்கள் முறையாக பதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் காட்டுகிறீர்கள் என கேட்டு தொடர்ந்து விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அதிகாரிகள் கல்வெட்டுகளை இன்னும் வைக்கவில்லை பெயரை மாற்றி கல்வெட்டுகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தி அவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

தொடர்ச்சியாக சோழவந்தான் பேரூராட்சியில் பெண் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை மற்றும் அவர்களின் வார்டுகளில் பணிகள் நடப்பதற்கு எந்த ஒரு முயற்சிகளையும் பேரூராட்சி நிர்வாகம் எடுப்பதில்லை என குற்றச்சாட்டுகள் மற்றும் தனிநபர் மரியாதையும் நசுக்கப்படுவது மிகுந்த அவமானத்தையும் வேதனையும் ஏற்படுத்துவதாக பெண் கவுன்சிலர்கள் மற்றும் சோழவந்தான் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இனிவரும் காலங்களிலாவது இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை உரிய நடவடிக்கைகள் எடுத்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.