

மதுரை மாவட்டம், திருநகர் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை முகாமில் முதல்வரின் புகைப்படத்துடன் இருந்த பிளக்சை கிழித்த மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. சிசி டிவி காட்சிகளை வைத்து போஸ்டர் கிழித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பது சம்பந்தமாக அரசு பள்ளிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட திருநகர் 94 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்தியன் சார்பாக சாரதா மேல்நிலைப்பள்ளி மற்றும் சாராபாய் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் மற்றும் தமிழக அரசு முத்திரையுடன் கூடிய பிளக்ஸ் பேனர் ஒட்டப்பட்டுள்ளது. இரு பள்ளிகளிலும் இருந்த முதல்வர் புகைப்படம் போட்ட ப்ளக்சை யாரோ அகற்றி இருந்ததை கண்டு ஒரு பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் பிளக்சை கிழித்து எடுத்துச் செல்லும் காட்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் புகைப்படம் இருந்த ப்ளக்சை கிழித்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
