அதிமுக மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு(2026) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி முயற்சிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், அதிமுகவோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அதிமுக ஒரு போதும் பாஜகவுடன் சேராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். மக்கள் பிரச்சினையைப் பேசவே, டெல்லி சென்றதாக செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் என பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடப்பவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற பாஜகவின் நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்க முடியாது என்று மறுத்துள்ளார். குறிப்பாக, கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து ரவுடித்தனம் செய்த ஓபிஎஸ்சை எக்காரணம் கொண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இந்த நிலையில், இன்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லிக்கு மீண்டும் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய நிலையில், கே.ஏ.செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்றார். அவர் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், மீண்டும் அவர் இன்று இரவு அவர் மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக கே.ஏ.செங்கோட்டையனை கொண்டு வர பாஜக திரைமறைவு வேலைகளை செய்து வருவதாகவும், அதற்காகத்தான் அவர் அடிக்கடி டெல்லி செல்வதாகவும் தகவல் பரவி வருகிறது. இதன் காரணத்தால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.