சென்னையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மீண்டும் புறக்கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே, பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.