• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அரசுப்பள்ளிகளில் ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு

Byவிஷா

Sep 20, 2025

அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றும் வகையில், ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந்தனை வினாக்களை வடிவமைக்கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிந்தனை திறனை மேம்படுத்தும் வினாக்கள் ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும், பொது அறிவு வினாக்களை வகுப்பு ஆசிரியருக்கும் தரவேண்டும். இந்த வினாக்களைக் கொண்டு மாதம்தோறும் மாணவர்களிடம் மதிப்பீடு நடத்த வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
இதன்மூலம் திறன் அடிப்படையிலான கேள்விகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறுவதுடன், பல்வேறு அடைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவும் வழிசெய்யும். ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பள்ளி ஆய்வின்போது இந்த செயல்பாடுகளின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டங்களின் போதும் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.