• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கடைசி விவசாயி மணிகண்டன் விஜய்சேதுபதிக்கு சீமான் புகழாரம்

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல் ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியானது விமர்சகர்கள் வெகுவாக பாராட்டிவரும் இந்தப் படம் திரையங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் பெரிதும் பாராட்டியுள்ளார்.

அவரது பாராட்டுரையில்….
அன்பிற்கினிய தம்பி மணிகண்டன் இயக்கத்தில், தம்பி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தினை முன் திரையிடலில் பார்த்து ரசித்தேன் என்று சொல்வதைவிட வியந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குப் படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இப்படியொரு படத்தினை எடுத்து மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று எண்ணியதற்காகவே தம்பி மணிகண்டனை எவ்வளவு போற்றினாலும் தகும்.

கல்வியும், மருத்துவமும் சந்தைப் பொருளாகி, விற்பனைக்கு வந்துவிட்ட தற்காலச் சூழலில் உணவு உற்பத்திக்கான விதைகளும் விற்பனைக்கு வந்துவிட்டது ஒன்றும் பெரிய வியப்பல்ல. வர்த்தக மயமாகிப்போன உலகில் நமது தொன்றுதொட்ட வேளாண்மை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் ஆகியவை எப்படியெல்லாம் சிதைத்து அழிக்கப்படுகிறது என்பதைத் திரையில் மிக அழகாக மொழிபெயர்த்துக் காட்டி பார்ப்பவர்கள் இதயங்களுக்குள் கடத்தியுள்ளார் தம்பி மணிகண்டன்.

விவசாயி வேடம் ஏற்று நடித்துள்ள முதியவரும், தம்பி விஜய் சேதுபதியும் தங்களுடைய மிக இயல்பான நடிப்பினால் படத்திற்கு மிகப்பெரிய வலுச்சேர்த்துள்ளனர்.
வழக்கமான படங்களில் இருக்கும் பாடல், சண்டை, நகைச்சுவை, சோகம் என அத்தனை காட்சிகளும் இந்தப் படத்திலும் உள்ளது. அதேசமயம் இயல்பான பின்புல காட்சிகளுடன் அவை படமாக்கப்பட்டுள்ளதுதான் தனிச்சிறப்பு. புது முகங்களின் எளிமையான, நேர்த்தியான நடிப்பு மெய்சிலிர்க்கச் செய்கிறது. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம் என அத்தனை பணிகளையும் ஒரு போர் வீரனுக்குரிய துணிவுடன் தம்பி மணிகண்டனே செய்துமுடித்துச் சாதித்துள்ளார். மிகச்சிறந்த படம். நிறையச் செய்திகளை ‘கடைசி விவசாயி’ நமக்குச் சொல்கிறது.

இன்றைக்கு விவசாயி பட்டினியால் சாகிறார் என்றால், அது நாளை நாம் உணவின்றிச் சாகப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பு’ என்பதைத் தொடர்ந்து பல காலமாகக் கூறிவருகிறேன். அது எந்த அளவுக்குச் சத்தியம் என்பதை இப்படம் நமக்கு உணர்த்தும். கடைசி மரமும் வெட்டப்பட்டுவிட்டால், கடைசி மீனும் பிடிக்கப்பட்டுவிட்டால், கடைசிச் சொட்டு நீரும் தீர்ந்துபோய்விட்டால் எப்படி நாம் வாழவே முடியாதோ, அப்படித்தான் கடைசி விவசாயியும் கொல்லப்பட்டுவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது.

‘கடைசி விவசாயி’ வெறும் படமல்ல. நம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பாடம். தம்பி விஜய் சேதுபதி தொடர்ந்து வர்த்தக ரீதியிலான படங்களில் நடித்தபோதும் தனது மன நிறைவுக்காக, தான் நேசித்து நிற்கும் திரைக்கலைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதலோடு இப்படியான திரைப்படங்களைத் தயாரிக்கத் துணை நிற்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னுடைய நம்பிக்கை. இந்தப் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பங்கேற்று நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இப்படியான திரைப்படங்களை வெற்றிபெறச் செய்வதன் மூலமே இன்னொரு காக்கா முட்டை, இன்னொரு மேற்கு தொடர்ச்சிமலை போன்ற படங்கள் திரைக்கு வரக்கூடிய வாய்ப்பு உருவாகும். ஆகவே, அன்பிற்கினிய சொந்தங்கள் மற்ற படங்களைப் போல் இதையும் எண்ணாமல், சிறுகச்சிறுக சிதைந்து கொண்டிருக்கும் நம் வாழ்வியலை எடுத்துச் சொல்லும் படம் என்பதால், ஒவ்வொருவரும் திரையில் சென்று பார்த்துப் இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்!