• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாம் தமிழர் கட்சிக்கு இது களையுதிர் காலம் – சீமான் பரபரப்பு பேட்டி

ByP.Kavitha Kumar

Feb 22, 2025

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகல் குறித்த கேள்விக்கு, எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பை குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என காளியம்மாளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகியுள்ளதாக தகவல் பரவியது. இது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகியுள்ளதாக வெளியான தகவல் குறித்து சீமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,”கட்சியில் இருந்து இயங்குவதற்கும், வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் உண்டு. நாம் தமிழர் கட்சி ஒரு ஜனநாயக அமைப்பு. காளியம்மாள் முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் இருந்தார். அவரை கட்சிக்குள் அழைத்து வந்தது நான்தான்.

யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேரலாம். பருவக் காலங்களில் இலையுதிர் காலம் என்ற ஒன்று இருப்பதுபோல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். கட்சியில் தொடர்ந்து இருப்பதா அல்லது விலகுவதா என்பதை காளியம்மாள் முடிவு செய்யட்டும். அதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார்.