என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வைச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி கதறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை சீமான் பாலியல் பலாத்காரம் செய்ததோடு கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டுமென்று வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது முறை, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அதை சீமான் வீட்டில் இருந்தவர்கள் கிழித்து எறிந்ததால் சீமான் வீட்டு காவலாளி அமுல்ராஜ், டிரைவர் சுபாகர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தர்மபுரியில் சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீதிமன்றம் விசாரணை நடத்த மூன்று மாத கால அவகாசம் கொடுத்திருக்கும் நிலையில் 3 நாட்களில் முடிக்க ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. என்னமோ வயசுக்கு வந்து குச்சில உட்கார்ந்துட்டு இருக்க புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து குண்டுகட்டாக கற்பழித்து விட்ட மாதிரி எல்லோரும் கதறிட்டு இருக்கீங்க. என் கூட மோதி ஜெயிக்க முடியலை.
என்னைப் பார்த்து நீ நடுங்கிட்ட. என்னை சமாளிக்க முடியலை. அப்பப்போ ஒரு பொம்பளையை கொண்டு வந்து முன்னாடி நிறுத்துறீங்க. என்னமோ கல்லூரியில் படிச்சிட்டு இருக்க புள்ளைய தூக்கிட்டு போய் கற்பழிச்சவிட்ட மாதிரி. என்ன பெரிய பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை என்று பேசிட்டு இருக்கீங்க. அந்த பொண்ணு சொன்னால் அது உண்மையாக மாறிவிடுமா? முதலில் விசாரணை நடத்துங்க என்றார்.
ஏற்கெனவே பல்வேறு சர்ச்சை பேச்சில் சிக்கிய சீமான், தற்போது பாலியல் பலாத்காரம் தொடர்பாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.