கள்ளிக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கில் அவருடைய தோழிகள் ரகசிய வாக்குமூலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது. பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவி ஸ்ரீமதி மரணம் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் உறவினர்கள், மாணவியின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர் படித்த பள்ளி நிர்வாகத்தினர், மாணவிக்கு வகுப்பு எடுத்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பள்ளியில் உள்ள பிற ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் படித்த அவரது தோழிகள் அளிக்கும் வாக்குமூலமே இவ்வழக்கின் முக்கிய சாட்சியமாக கருதப்படுவதாலும், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பதாலும் மாணவியின் தோழிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து அதற்கான ஒப்புதலை நீதிமன்றத்திடம் இருந்தும் பெற்றனர்.