தமிழகம் முழுவதும் செப்டம்பர் 29ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2009 மே 31ம் தேதி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வகையான ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ம் தேதி பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்திருப்பதால் சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பள முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த முரண்பாட்டை களைய கோரி பல்வேறு போராட்டங்களை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.) நடத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இது குறித்து ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1-ல் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 29ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
செப்.29ல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
