• Fri. May 10th, 2024

தீபாவளி நேரத்தில் சம்பளமில்லாமல் கதறிய தூய்மைப்பணியாளர்கள்..,களத்தில் இறங்கிய அரசியல் டுடே..!உடனடி ஆக்ஷனில் அமைச்சர் நேரு..!

Byவிஷா

Nov 10, 2023

பாலோ அப்:

தீபாவளி நேரத்தில் சம்பளமில்லாமல் கதறிய தூய்மைப்பணியாளர்கள்..,
களத்தில் இறங்கிய அரசியல் டுடே..!
உடனடி ஆக்ஷனில் அமைச்சர் நேரு..!

தீபாவளி மாதத்துல கூட சம்பளம் இல்லங்க. நாங்க குடும்பத்த பார்ப்போமா, குப்பைய அள்ளுவோமா என்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில் இருந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அலுவலகம் முன்பு போராட்டத்தில் குதித்தனர். உடனடியாக களம் இறங்கியது நமது அரசியல் டுடே செய்தி நிறுவனம்.


ஓ.பி.எஸ் தொகுதியில துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து, போடி நகரமே ஸ்தம்பித்தது. இந்தச் செய்தியை அரசியல் டுடே மிகத் தெளிவாகப் பதிவு செய்து வெளியிட்டது. இதைக் கண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உடனே சம்பளத்த வழங்குங்கய்யா! மானத்தை வாங்காதீங்க! தூய்மைப் பணியாளர்தான்யா தெய்வம்..அவங்களுக்குப் போய் சம்பளத்தை நிப்பாட்டாலமாய்யா…உடனே சம்பளத்தையும், போனஸையும் போடுங்கய்யா..அசிங்கப்படுத்துறீங்க! என்று தேனி மாவட்டத்துக்கே எச்சரிக்கை மணி அடித்து, அதிகாரிகளெல்லாம் தங்கள் கடமைகளை சரியாக செய்து பணியாளர்களின் குறைகளை தீர்த்துக் குடுங்கய்யா… என்று, தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளத்தை வழங்கச் சொல்லி உத்தரவிட்டதன் பேரில் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்பட்டது.
இதுபற்றி மேலும் விவரம் அறிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசினோம்..,


ஏதோ தவறு நடந்திருக்கு. சம்பளம்லாம் போட்டாங்கள்ள. ஒண்ணும் பிரச்னை இல்லைல. சந்தோஷமா தீபாவளியை கொண்டாடச் சொல்லுங்க. இந்தத் தகவல் எனக்கு தெரியாது. இப்படி பணியாளர்கள் கஷ்டப்படுறாங்கன்னு எனக்கு தெரியப்படுத்துனீங்க. சிலருடைய அலட்சியத்தால் இப்படி தவறு நடந்திருக்கிறது. இனிமேல் இந்தத் தவறு நடக்காது என்றார் பொறுப்பாக.
மேலும் இதுபற்றி விவரம் அறிய நகராட்சி ஆணையளர் ராஜலட்சுமியிடம் பேசினோம்..,
120க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கும் சம்பளம் போட்டாச்சு. பிரச்னை முடிஞ்சு போச்சு. போனசும் நாளைக்கு வழங்கி விடுவோம் என்றார் படபடப்பாக.
இதுபற்றி நம்மிடம் பேசிய இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜெகநாதன்..,


தேனி மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, கிராமப்புற ஊராட்சிகளில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு, மாதா மாதம் 1ஆம் தேதி முதல் 5 தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு முறையாக மருத்துவக் காப்பிடு (இ.எஸ்.ஐ), வருங்கால வைப்பு நிதி (பி.எப்) மாதம் மாதம் சம்பளத்தில் பிடித்து, காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விதியாக இருந்து வருகிறது. இந்த விதியை மாற்றி அமைக்கும் விதமாக, நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் தனக்குக் கீழ வேலை பார்க்கிறவன் குப்பை அள்ளுறவன்தானே! இவங்களுக்கெல்லாம் என்ன மரியாத. இவர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது, அரசாங்கத்தில் கொடுக்கப்படுகிற உபகரணங்கள் வழங்கக் கூடாது, வைப்பு நிதி கொடுக்கக் கூடாது, மருத்துவக்காப்பீடு கொடுக்கக் கூடாது என்று ஏளனமாக நினைத்து, எந்த ஒரு வசதியுமே செய்து கொடுக்காம வேலை மட்டும் வாங்குறாங்க. இப்படியெல்லாம் செய்யுறதுனாலதான் பிரச்னையே வருது. இதற்கு உதாரணம் தேனிமாவட்டம்தான். அதுலயும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் தொகுதியிலதான் பிரச்னையே என்று காரசாரமாகவே பேசினார் ஜெகநாதன்.
சிறிது நேரம் இளைப்பாறி விட்டு பேசத் தொடங்கிய ஜெகநாதன்..,
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில ஒப்பந்த அடிப்படையில 120க்கும் மேல தூய்மைப்பணியாளர்கள் பணி செய்றாங்க. அந்தப் பணியாளர்களுக்கு தீபாவளி அதுவுமா சம்பளம் கூட வழங்கலன்னா பார்த்துக்குங்களேன். ஒரு பணியாளர் பணி செஞ்சு சம்பளத்தைக் கேட்கக் கூட போராடுற சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விதம் இந்த அரசாங்கத்துக்கு கேவலமில்லயா. காலைல விடிஞ்சும் விடியாம தூய்மைப் பணியாளர்கள் சம்பளம் குடுங்கய்யா, எங்கள குப்பை அள்ளுறவங்களா பார்த்து குப்பையா ஒதுக்கீட்டீங்களேய்யா என்று போராடுனதுக்கு அப்புறமாதான் பத்திரிகை துறை வருது, காவல்துறை வருது, அதிகாரிகள் பேசுறாங்க, மாவட்டத்தையே ஆட்சி செய்ற ஆட்சியாளர்கள் பேசுறாங்க. இந்தப் போராட்டம் பண்ணுனதுக்கு அப்புறம்தான் இந்த மாதிரி ஒன்று நடந்திருக்கிறதே வெளியில வருது. அடிப்படையான விஷயத்தை செஞ்சு கொடுக்கணும்னு ஏன் அதிகாரிகளுக்கு தோணல. போராடுனாதான் எல்லாம் கிடைக்கும் போல. இத ஏன் நான் தெளிவா சொல்றேன்னா, இந்தப் போராட்டம் நடக்கும் போது அரசியல் டுடே செய்தி நிறுவனம்தான் முதல்ல இந்தச் செய்தியை வெளியிட்டாங்க. இது தூய்மைப்பணியாளர்கள் பிரச்னை இல்லங்க. இது எங்க பிரச்னை என்று நீங்கதான் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று 120க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வச்சது எங்களுக்கு சந்தோஷமா இருந்தாலும் கூட, மீண்டும் நான் சொல்றேன், போராடிதான் எல்லாம் பெற வேண்டி இருக்கு. இருந்தாலும் பரவாயில்ல. சம்பளம், போனஸ் வழங்குங்கன்னு சொல்லி போராடுன அரசியல் டுடே நிறுவனத்துக்கும், சம்பளத்தை உடனே போடுங்கப்பா…என்று சொன்ன நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இணை இயக்குநருக்கும் நாங்க நன்றிய தெரிவிச்சுக்கிறோம். போராட்டம்தான் எங்க வாழ்க்கைன்னு முடிவாகிப் போச்சு. போராட்டம் பண்ணிதான் தீர்வுனா எங்க உயிர் உள்ளவரை நாங்க போராடிக்கிட்டுதான் இருப்போம் என்றார் வேதனை மல்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *