

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏராளமான ராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டு வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுவரை சுமார் 25 மக்கள், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கு அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
ரஷ்யாவுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளன. இந்த நிலையில், உக்ரைனில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த சீனாவின் உதவியை ரஷ்யா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, வாஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை, என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரோம் சென்று இன்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதால், சீனா ரஷ்யாவுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவது கடினம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவை கண்டிக்காத சீனா, உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது. இன்னும் ரஷ்யாவின் கோரிக்கைக்கு சீனா தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
