உக்ரைன்- ரஷ்யா போர் கடுமையாக நிலவி வரும் சூழலில் தொடர்ந்து மக்கள் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். இந்த போர் காரணமாக பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.
இதனால் ரஷ்யாவில் இந்த கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முடியாத நிலை ரஷ்ய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் சேவையை நிறுத்தியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவும் பல்வேறு நிறுவனங்கள், நாடுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வன்முறைக் கருத்துக்களை அனுமதித்த இன்ஸ்டாகிராம் செயலியின் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மார்ச் 14 ஆம் தேதி முதல் ரஷியாவின் சில பகுதிகளில் இந்த முடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் செயலியின் முக்கிய நிர்வாகியான ஆடம் மோசரி கூறுகையில், ரஷ்யாவில் 8 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாவைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த முடக்கம் தவறானது, எனத் தெரிவித்துள்ளார். இதோடுமட்டுமல்லாமல் ஏற்கனவே, அமேசான் வர்த்தக நிறுவனம், பேஸ்புக், நெட்பிளிக்ஸ், சாம்சங், ஆப்பிள், சோனி, கூகுள், டிஸ்னி, யூனிவர்செல், டிக்டாக், INTEL, BMW, FORD, HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.