தாம்பரம் அருகே படப்பை பத்திரப் பதிவு அலுவலக வளாகத்திற்குள், நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடி உடைத்து, காரின் டிக்கியில் இருந்த ரூ.6 லட்சம், பணத்தை பட்டப் பகலில் துணிகர கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சென்னை சிந்தாரிப் பேட்டையைச் சேர்ந்த மளிகை கடைமொத்த வியாபாரியான முஷாமல் முகமது (வயது-40) என்பவர், தாம்பரம் அடுத்த படப்பை அருகே உள்ள செரப்னஞ் சேரி பகுதியில் உள்ள நிலம் ஒன்றை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக, இன்று மதியம், படப்பை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் வந்திருந்தார். கார் டிக்கிக்குள் ரூ. 6லட்சம் பணத்தை பையில் வைத்து, கார் டிக்கியை மூடிவிட்டு, பத்திரப்பதிவு கையெழுத்து போடுவதற்காக, அலுவலகத்தின் உள்ளே சென்று விட்டு, சுமார் அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்து, காரில் உள்ள பணத்தை எடுக்க, கார் அருகே வந்தார். ஆனால் காரின் டிரைவர் இருக்கை அருகே உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு, அதன் வழியாக கையை விட்டு கார் டிக்கியை திறப்பதற்கான லிவரை இழுத்து, கார் டிக்கி திறக்கப்பட்டு இருந்தது. அதோடு காரில் இருந்த ரூ.6 லட்சம் பணம் பையுடன் மாயமாக மறைந்திருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முஷாமல் முகமது, உடனடியாக கூச்சல் போட்டார். இதை அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நின்றவர்கள் வந்து பார்த்தனர். அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் துணிச்சலாக, கார் கண்ணாடியை துண்டித்து எடுத்து விட்டு, அதன் வழியாக கையை விட்டு லிவரை இழுத்து, கார் டிக்கியை திறந்து, பணத்தை எடுத்துக் கொண்டு மறைந்து செல்வது தெரிய வந்தது.

இதை அடுத்து முஷாமல் முகமது, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, படப்பை பத்திரப் பதிவு அலுவலகம் வந்து விசாரணை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் படப்பை பத்திரப்பதிவு அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.6 லட்சம் நூதனமான முறையில், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.