• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தஞ்சை விரைந்தார் முதல்வர் -தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

ByA.Tamilselvan

Apr 27, 2022

உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டுச்சென்றார்.
தஞ்சாவூர் – களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.
இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவில் அப்பர் படம் வைத்து இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது .
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இன்று அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.
இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர்.சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும்களிமேடு கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தையும் பார்வையிட்டார். இதுதொடர்பாக போலீசார் கள்ளபெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
: இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் திருச்சி செல்கிறார். அங்கிருந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் சாலை மார்க்கமாக தஞ்சை செல்கிறார். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடுபங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.