மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு – ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கெடு தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம், வரும் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு – ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு எண் பயனற்றதாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.