இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைப்பது என்றுமே நடக்காத காரியம் என முன்னாள் வீரர் கபில்தேவ் விளாசியுள்ளார்.
2023ம் ஆண்டின் முதல் தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா களமிறங்குகிறது. இதில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது பிசிசிஐ. அதாவது ரோகித், விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட பல சீனியர் வீரர்களை டி20 அணியில் இருந்து புறக்கணித்துள்ளது.
2024ம் ஆண்டு வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான திட்டம் தற்போதே இந்திய அணியில் தொடங்கிவிட்டது. அதன்படி ரோகித், கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாரும் இனி டி20 திட்டத்தில் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கபில், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சில கடினமான முடிவுகளை எடுத்து தான் தீர வேண்டும். தனிப்பட்ட வீரரை பற்றி யோசிக்காமல், அணியை பற்றி யோசிக்க வேண்டும். கோலி, ரோகித் என 2 – 3 வீரர்கள் உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்கவே நடக்காது. கோப்பையை வெல்லும் அளவிற்கான இளம் வீரர்கள் நம்மிடம் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் உலகக்கோப்பையை வெல்ல முடியும்.
இரண்டு மூன்று வீரர்கள் அணியின் தூண்களாக இருப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று தான். ஆனால் அதனையெல்லாம் உடைத்துவிட்டு, 5- முதல் 6 வீரர்கள் வரை கொண்ட தூண்களை உண்டாக்க வேண்டும். எனவே சீனியர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, இளம் வீரர்களை முன்னுக்கு கொண்டு வருவது சரியான முடிவு. அதனை அணிக்காக ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கபில்தேவ் கூறியுள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைபெறவுள்ளது. இதனால் மற்ற அணிகளை விட இந்திய வீரர்களுக்கு பெரிய பலமாகும். இதனை மனதில் வைத்து தான் பிசிசிஐ தற்போதே 20 வீரர்களை தேர்வு செய்துவிட்டது. அந்த 20 வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து உலகக்கோப்பைக்கு தயார் செய்யவுள்ளது.