• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வருமானவரித்துறை அலுவலர்கள் போல் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை..!

Byவிஷா

Feb 25, 2023

ஆந்திரப் பிரதேசத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் போல் தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பழைய குண்டூர், பக்கத்தில் நகரில் எர்ரம்செட்டி கல்யாணி என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் அழகாக உடை அணிந்து மூன்று நபர்கள் வருமான வரித்துறை அலுவலர்களாக காரில் வந்துள்ளனர். திடீரென கல்யாணி வீட்டிற்குள் நுழைந்த அந்த அலுவலர்கள் வீட்டின் கதவை உட்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த அனைவரிடமும் தாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் உங்கள் வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணத்தைப் பதுக்கி வைத்து இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது நாங்கள் சோதனை செய்வதற்காக வந்திருக்கிறோம் என அனைத்து அறைகளையும் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ஏராளமான சொத்து ஆவணங்கள், ரொக்க பணமாக இருந்த 50 லட்சம், 50 சவரன் நகை, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டு பொருட்களை மீண்டும் எடுத்துக் கொள்ளுமாறு அவசரமாக அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
வீட்டுக்கு வந்து சோதனை செய்தவர்கள் போலியான வருமான வரித்துறை அலுவலர்கள் எனத் தாமதமாகக் கல்யாணி உணர்ந்துள்ளார். இது குறித்து அவர் பழைய குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வந்தவர்கள் போலியான வருமான வரித்துறை அலுவலர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் சோதனைக்கு வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வழக்குப் பதிவு செய்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.