தேனியில் இருந்து கண்டமனூர் விலக்கு, அடைக்கம்பட்டி வழியாக தேக்கம்பட்டி, ஒக்கரைப்பட்டி பகுதிவரை செல்லும் அரசுப்பேருந்து நாள்தோறும் காலை பள்ளி நேரத்திற்குள் வராமல் காலை 9 மணிக்கு மேல் அடைக்கம்பட்டி பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் வரை பயணம் செய்து தேக்கம்பட்டி, ஒக்கரைப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் 5 கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது 10 மணி ஆகி விடுவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை நாள்தோறும் ஏற்படுவதோடு இதன் காரணமாக மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவது, வகுப்பு நேரகுறைவு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களும் மாணவர்களின் பெற்றோரும் கானாவிலக்கு – வருசநாடு சாலையில் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமனூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுத்து அரசு பேருந்து பள்ளி செல்லும் நேரத்திற்குள் சரியாக வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக தெரிவித்ததையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் பெற்றோர் கலைந்து சென்றனர்.