

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அனைத்துக்கும் செல்போன் செயலிகள் வந்துவிட்டது. அந்தவகையில் அண்மைக்கலமாக சட்டவிரோதமான கடன் ஆப்கள் ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. இதுபோன்ற கடன் ஆப்களால் பணத்தை இழந்தவர்களும், அதனால் உயிரை இழந்தவர்களும் அதிகரித்து வருகிறது. இது குறித்து அவ்வதுபோது காவல்துறை, வங்கி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதேநேரத்தில் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு சுமார் 600 சட்டவிரோத கடன் ஆப்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. கடன், உடனடி கடன், இன்ஸ்டண்ட் கடன் போன்றவற்றை வழங்கும் சுமார் 1100 கடன் ஆப்கள் இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்டோர்களில் இருப்பதாக ரிசர்வ் வங்கி குழு கண்டறிந்துள்ளது.
இதில் சுமார் 600 ஆப்கள் சட்டவிரோதமான கடன் ஆப்கள் எனவும் ரிசர்வ் வங்கி குழு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஆன்லைனில் சட்டவிரோதமான கடன் வழங்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர வேண்டுமென இந்திய அரசிடம் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து 2,562 புகார்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமான புகார்கள் மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.
