• Fri. Apr 26th, 2024

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாதம் 150 ரூபாய் ஊதியத்திற்கு பணியாற்றி, ஓய்வு பெற்ற பெண்களுக்கு பணபலன்கள் வழங்காததால் அரசு அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஓருவர் மயங்கி விழுந்ததால், போலீசார் மற்றும் நாகர்கோவில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றனர். மாத ஊதியமாக 60 ருபாய் முதல் 105 ரூபாய் வரை பெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் இவர்களைப் போல் அரசு பள்ளிகளில் பணியாற்றிய சுமார் 2,000 பேரை பணி வரன்முறை செய்து முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டு பலன்களும் வழங்கப்பட்டன. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இதுவரை பண பலன்களை வழங்கவில்லை.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, நீதிமன்றம் இவர்களுக்கான பண பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. எனினும், இதுவரை பண பலன்கள் வழங்கப்படாத நிலையில், முப்பதுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற பெண் துப்புரவு பணியாளர்கள் திடீரென நாகர்கோயிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாத நிலையில், முதியவர்களான பெண்களை கைது செய்ய இயலாமல் போலீசாரை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பணபலன்களுக்காக அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதியோரான பெண்களால் நாகர்கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *