ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் யானைகள் கூட்டமாக வந்து பயணிகள் நிழல் குடையை அடித்து நொறுக்கியதால் மலைக்கிராம மக்கள் அச்சத்தோடு உள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் யானைகள் கூட்டமாக வந்து பயணிகள் நிழல் குடையை அடித்து நொறுக்கி விட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் தொடர்ந்து மனை அடிவாரத்தில் உள்ள பழனி அருகே உள்ள ஆயக்குடி, வரதமாநதி அணை, கோம்பைப்பட்டிமற்றும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை மரங்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருவதால் விவசாயிகள் அச்சத்தோடு உள்ளனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் உள்ள வடகாடு ஊராட்சி பெத்தேல்புரத்திற்கு நேற்று (திங்கள்கிழமை) இரவு மலையில் இருந்து இறங்கி வந்த 8 காட்டு யானைகளை கண்ட மலை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடந்தனர்.
இதனை அடுத்து அந்த யானைகள் பெத்தேல்புரம் பயணிகள் நிழல்குடையை சேதப்படுத்தி விட்டு மீண்டும் மலைப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
நேற்று காலை மலைக்கிராம மக்கள் பயணிகள் நிழல் குடையை யானைகள் சேதப்படுத்தி சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர்களிடம் புகார் செய்தனர்.
சிறுவாட்டுகாடு மலைப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காக வடகாடு பரப்பலாறு அணை ஆற்றுக்கு வரும் வழியில் உள்ள பெத்தேல்புரத்தில் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருக்களில் யானைகள் அடிக்கடி வருவதால் மலை கிராம மக்கள் அச்சத்தோடு வசித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு காட்டு யானைகளால் மலை கிராம மக்களுக்கு பெரும் உயிர் சேதம் ஏற்பட்டதற்கு முன்பாக ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள யானைக் கூட்டங்களை நிரந்தரமாக மலைப்பகுதிக்குள் விரட்டுவதற்கும் பெத்தேல்புரம் மலை கிராமத்தில் வனத்துறை முகாம் அலுவலகம் அமைத்து கண்காணித்து யானைகள் இரவு நேரங்களில் வரும் போது அதை வெடிவைத்து நிரந்தரமாக விரட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



