• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விவேக் பெயரை அவர் வீடு இருக்கும் தெருவுக்கு வைக்க முதல்வரிடம் கோரிக்கை..!

நடிகர் விவேக் வசித்து வந்த வீடு இருக்கும் தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.தமிழ்ச் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்த நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதியன்று திடீரென்று காலமானார். அவருடைய இடத்தை நிரப்புவதற்கு இன்றுவரையிலும் வேறு எந்த நடிகரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் விவேக்கின் நினைவையொட்டி மரக் கன்றுகள் தமிழகம் முழுவதும் நடப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் விவேக் மனைவி அருட்செல்வி தனது மகளுடன் சந்தித்தார்.
அப்போது விவேக்கின் வீடு தற்போது இருக்கும் தெருவுக்கு விவேக்கின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தார் விவேக்கின் மனைவி.
நடிகர் விவேக்கின் வீடு சென்னையில் விருகம்பாக்கத்தில் பத்மாவதி நகர் மெயின் ரோட்டில் உள்ளது. இந்தப் பெயரைத்தான் விவேக் தெரு என்று பெயர் மாற்றம் செய்ய அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஆவண செய்வதாக முதல்வர் கூறியிருப்பதாகத் தகவல்.