முதலைகள் நிறைந்து வாழும் நீர்நிலைகள் மிகத் தூய்மையாக மட்டுமன்றி, நீரின் வழியே நோய்களைப் பரப்பும் பல்வேறு நுண்ணுயிர்களிடமிருந்து மனிதர்களைக் காப்பதில் பெரும் பங்காற்றுபவை. நீர்நிலைகளின் நண்பனாகத் திகழும் முதலைகளை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து ஜூன் 17-ஆம் தேதி உலக முதலைகள் தினத்தில் உறுதியேற்போம் என முதலைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

‘கருப்பு பண முதலைகள்’, ‘முதலைக் கண்ணீர் வடிக்கிறான்’ என்று முதலை எனும் ஊர்வன விலங்கினத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் பேசும் சொலவடைகளைப் புழக்கத்தில் காண்கிறோம். இவையெல்லாம் எப்படி எதிர்மறையானவையோ, அதே போன்ற முதலை குறித்த பொதுவான நமது நம்பிக்கைகளும், அச்சங்களும்கூட எதிர்மறையாகவே உள்ளன.

இயல்பாகவே முதலைகள் நீர்நிலைகளின் தூய்மைக்குப் பெரிதும் பங்காற்றுகின்றன. ஆகையால் பல்வேறு நோய்கள் நமக்குப் பரவாமல் காப்பதில் அவற்றின் பங்கு அளப்பரியது. தற்போது முதலைகள் பெருமளவு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை மிகுந்த அச்சத்திற்குரிய ஒன்றாக வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
