மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் வடக்கு ரத வீதி பகுதியில் மழையால் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அந்தப் பகுதி சாலையில் மழை நீர் தேங்கி சாலையில் அடுத்தடுத்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பள்ளமானது கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆகையால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






