அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்புகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் கரும்பு பயிரிடப்பட்டு பத்து மாதங்கள் முடிந்த பின்பு அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயன் தரக் கூடியதாக உள்ள நிலையில் நடவு செய்து இரண்டு மாதங்களேஆன நிலையில் தனிச்சியம் பகுதியில் சுமார் 50 க்கு மேற்பட்ட ஏக்கரில் கரும்பு நடவு செய்த வயல்களில் மழை நீர் புகுந்ததால் சேதமடைந்துள்ளது.
மேலும் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதி இல்லாத நிலையில் இரண்டு நாட்களாக கரும்பு வயல்களுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக கரும்பின் வேர் பகுதி அழுகியும் வளர்ச்சி குறைவும் ஏற்பட்டு விவசாயிகளுக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என இந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆகையால் வேளாண்மை துறை மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த் துறையினர் இணைந்து அலங்காநல்லூர் பகுதிகளில் கரும்பு வயல்களுக்குள் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்துள்ள கரும்புகளை கணக்கிட்டு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








