• Wed. Nov 6th, 2024

கூடுதல் துப்பரவு பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையும் 52 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நகராட்சியில் 100க்கும் குறைவான துப்பரவு பணியாளர்கள் உள்ளனர். துப்பரவு பணிக்கு வந்த சிலர் காக்கி சீருடை அணியாமல் அதிகாரிகளின் ஏவல் பணியாளர்களாகவும், சூபர்வைசர்களும் அவர்களுக்கு ஒரு எடுபிடி வைத்துக்கொண்டு இருப்பதால் துப்பரவு பணிகளில் மிகுந்த சுணக்கம் ஏற்படுகிறது. மேலும் 11 வார்டுகளில் தனியார் மூலம் துப்பரவு பணிகள் நடைபெறுகிறது. நகராட்சி பணியாளர்களுக்கு கிருஷ்ணாபுரம் பூங்கா மற்றும் நகராட்சி அலுவலகத்திலும், தனியார் துப்பரவு பணியாளர்களுக்கு தீ அணைப்பு நிலையம் அருகிலும் மஸ்டர் நடைபெறும்.

துப்பரவுபணியாளர்களில் பலர் சீருடை யோ அடையாள அட்டையோ அணி வது கிடையாது. இதனால் சில துப்பரவு பணியாளர்கள் பணி செய்யாமல் மாற்று ஆட்களை நியமித்துள்ளதாக பொது மக்களிடையே கருத்து நிலவுகிறது. தற்போது மார்ச் மாதம் என்பதால் வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிரிக்க துப்பரவு பணியாளர்கள் உதவி புரிந்தாலும் 2 மற்றும் 3 ஆண்டுகள் வரி ஏய்ப்பு சம்பவங்களால் நகராட்சி உயர் அதிகாரிகளிடம் வாய் மொழி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் பெண் துப்பரவு பணியாளர்கள் கண்டிப்பாக சீருடையும், அடையாள அட்டையும் அணிந்திட வேண்டும் என உத்தரவு கடுமையாக கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் சென்னையில் நடைபெற்ற மஸ்டர் ரோல் ஊழல் கடையநல்லூர் நகராட்சியில் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று குறிப்பிட்டனர்.

மேலும் கூடுதலாக 2 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் நகராட்சிக்கு தேவைப்படுகிறது. ஆகையால் புதிதாத பொறுப்பேற்ற தலைவர் உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் கலந்து பேசி அரசிடம் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டுமென சமூக ஆர்வலர் விரும்புகின்றனர். புதிய நகர்மன்ற தலைவராக பதவி ஏற்றுள்ள ஹபீபுர் ரஹ்மானை சந்தித்து நகராட்சி தூய்மை பணியாளர்களின் நிண்ட நாள் கோரிக்கைகளான ஊழியர்களின் எண்ணிக்கையை 300 தொழிலாளர்களாக அதிகப்படுத்துவது, ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ.485/- ஆக உயர்த்துவது, வேலை செய்திட தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது, ஒப்பந்த தூய்மை பணி தொழிலாளர்களுக்கு EPF பிடித்தமைக்கான கணக்கு விபரம், ESI மருத்துவ வசதிகள், அடையாள அட்டை வழங்குவது, தூய்மை பணியாளர்களுக்கு காலணி வீடு கட்டி தருவது உட்பட பல கோரிக்கையினை நிறைவேற்றிட நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன், துணைத்தலைவர் இராசையா, ஆகியோரிடம் சிஐடியூ சங்க மாவட்ட பொது செயலாளர் சின்னசாமி, மாவட்ட இணைச்செயலாளர் இராஜசேகரன், கருப்பசாமி ஆகியோர் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவன்னா மசூது, நகர்மன்ற உறுப்பினர்கள் முகம்மது அலி, சுந்தர மகாலிங்கம், அரஃபாவ காப் அக்பர் அலி மற்றும் சி.ஐ.டி.யூவைச் சார்ந்த முத்தையா, வேலு, கருப்பசாமி, முருகன், கருப்பசாமி, நாகம்மாள்,மாரியப்பன், காளிமுத்து, பேச்சியம்மாள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *