மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் பாதசாரிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி
மதுரை காளவாசல் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக காணப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள், மாநகராட்சி செயற்பொறியாளர் கனி (திட்டம்) மற்றும் இளநிலை பொறியாளர் கனி உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வைத்திருந்த கடைகளை அதிரடியாக அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பைபாஸ் சாலையில் பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் மற்றும் சாலையோர நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலைத் துறையினர் உடன் இணைந்து காளவாசல் பைபாஸ் ரோடு பகுதிக்கு வருகை தந்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் கடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மேற்கூரைகள் மற்றும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் மற்றும் விளம்பர பலகைகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதுபோல் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள், சாலையோரம் கடைகளில் போடப்பட்டிருந்த சேர்கள், பெஞ்சுகள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கரிமேடு போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி மற்றும் கரிமேடு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சந்தனகுமார் மற்றும் எஸ். எஸ். காலனி உதவி ஆய்வாளர் அழகுமுத்து ஆகியோர் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
