மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர்அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கும் பயன் அளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் 4,773.13 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.90 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் 19-வது முறையாக ஜூன் மாதம் 12-ந் தேதி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 727 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 103.35 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16-ந் தேதி கல்லணைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.