நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருப்பதுடன், அவரது மரண வழக்கில் இருந்து வரும் புதுப் புது தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2ம் தேதி இரவு முதல் ஜெயக்குமாரை காணவில்லை என 3ம் தேதி மாலை அவரது மகன் கருத்தையா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் ஜெயக்குமாரை தேடிய நிலையில் 4ம் தேதி அவரது சொந்த ஊரான திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் இரும்பு கம்பிகளால் கை, கால்கள் கட்டப்பட்டு பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னதாக, அவர் எழுதியதாக கூறப்படும் கடிதங்களில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு, முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உட்பட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
எனவே, அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும்; மேலும், மேற்கண்ட நபர்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. குறிப்பாக, மே 4 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பாக்கல் கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது பிரேத பரிசோதனையின்போது, அவரது சில உள்ளுறுப்புகளை மருத்துவக் குழு ஆராய்ந்ததில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
அதாவது ஜெயக்குமாரின் குரல்லவளை முற்றிலும் எரிந்து போயுள்ளது. பொதுவாக, ஏற்கனவே உயிரிழந்த உடலை எரித்தால் மட்டுமே நுரையீரலில் திரவங்கள் தங்காது. ஜெயக்குமார் நுரையீரலிலும் திரவங்கள் தங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், ஜெயக்குமார் இறந்த பிறகு அவரை எரித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக நெல்லை எஸ்.பி சிலம்பரசன் மேற்பார்வையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவிடம் நெல்லையில் வைத்து விசாரணை நடைபெற்றது. அதேபோல நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் தற்போது வரை, ஜெயக்குமார் மரணத்தில் போலீசாருக்கு துப்பு துலங்கவில்லை என தெரிகிறது.
முன்னதாக ஜெயக்குமாரின் மகன் இந்த மரணத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு இருந்தது. விசாரணையில் ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்படும் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஜெயக்குமாரின் மகன் கருப்பையா ஜாப்ரின் ஊரில் இல்லை என்பது தெரியவந்தது. அவர் வெளியூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.
அதேபோல, காணாமல் போவதற்கு வரை ஜெயக்குமார் பயன்படுத்தி வந்த இரண்டு செல்போன்களும் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த 2ம் தேதி இரவு 10:30 மணியளவில் கரைசுத்துபுதூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஜெயக்குமார் பொருட்கள் வாங்க சென்ற சிசிடிவி காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், அந்த கடையில் இருந்து ஜெயக்குமார் நேராக 10.45 மணிக்கு தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், வீட்டு வாசல் வரை வந்த ஜெயக்குமார் வீட்டுக்குள் செல்லவில்லை.
வாசலில் அவர் கார் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது. எனவே, இரவு 10.45 மணிக்கு பிறகு ஜெயக்குமாருக்கு என்ன நடந்தது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. வீடு வரை வந்த ஜெயக்குமாரை மர்ம நபர்கள் கடத்தி சென்றார்களா? காரில் இருந்து இறங்கி வேறெங்கும் சென்றாரா? அல்லது ஏற்கனவே கடத்தப்பட்டு போலீசாரை குழப்ப காரை மட்டும் மர்ம நபர்கள் அவரது வீட்டு அருகே விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று நேரடியாக ஜெயக்குமார் குடும்பத்தாரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார். மேலும், தற்போது ஜெயக்குமார் விட்டை சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் நெல்லை மாவட்ட காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேபோல, மாயமான ஜெயக்குமாரின் செல்போன் நம்பரையும் ஆய்வு செய்து வருகின்றனர். கடைசியாக ஜெயக்குமார் செல்போன் எப்போது சுவிட்ச் ஆஃப் ஆனது சுவிட்ச் ஆப் ஆவதற்கு முன்பு அவரை யார் யார் தொடர்பு கொண்டார்கள்? ஜெயக்குமார் வீட்டை சுற்றி சுமார் 10 கிமீ தூரம் வரை புது நபர்களின் செல்போன் நம்பர் அன்று பயன்பாட்டில் இருந்ததா? என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஆனால், தற்போது வரை ஜெயக்குமார் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதை போலீசார் உறுதி செய்யவில்லை. மிகவும் சவாலான வழக்காக இச்சம்பவம் போலீசருக்கு அமைந்துள்ளது. இதனால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் நெல்லை தனிப்படை போலீசார் திணறி வருவது குறிப்பிடத்தக்கது
டிஎன்ஏ டெஸ்ட்: இதற்கிடையில் 4ம் தேதி சடலமாக மீட்கப்பட்ட உடல் ஜெயக்குமார் உடல் தானா? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசார் அதன் உண்மை தன்மையை அறிவதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாப்ரினின் ரத்த மாதிரிகள் சேகரித்து, அதை டிஎன்ஏ பரிசோதனைக்காக போலீஸ் அனுப்பியுள்ளனர். விரைவில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வர உள்ளது. அதன்பிறகே மீட்கப்பட்டது, ஜெயக்குமார் உடலா? அல்லது வேறு நபரின் உடலா? என்பது அது உறுதியாக தெரியவரும்.