தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3,000 சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளன. விதிமுறைகளை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9ம் தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் 2வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டிருந்த 42 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது வரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021ம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 3வது கட்டமாக இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்பட உள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் 39 கட்சிகள் இருக்கின்றன.