• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

“அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என சத்குரு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சாமானிய மக்கள் கடந்த 500 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு எப்பாடுபட்டாவது கோவில் கட்டிவிட வேண்டும் என்ற சாமானிய மக்களின் 500 ஆண்டு கால மன உறுதிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. ராமர் கோவில் திறக்கப்படும் நிகழ்ச்சி நம் நாட்டின் ஒரு மகத்தான நிகழ்ச்சியாகும். கலாச்சார ரீதியாகவும் இது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விழா ஆகும்.

6,000, 7,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராமர் இப்போதும் நம்முடைய சமகால வாழ்க்கைக்கு தேவைப்படுகிறார். ஏனென்றால், ராமருடைய வாழ்க்கை என்பது ஒரு தொடர் தோல்விகளை கொண்டது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ராமர் தனது அரச பதவியையும், ராஜியத்தையும் துறந்தார். வன வாசத்தில் இருக்கும் போது அவருடைய பிரியமான மனைவியையும் அவர் இழக்க நேரிட்டது. பின்னர் போர் புரிந்து கடத்தப்பட்ட தனது பிரியமான மனைவியை மீட்டு வந்தார். அதன் பிறகும் சில காரணங்களால் அவரது மனைவியை மீண்டும் காட்டிற்கு அனுப்ப வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ராமர் தனது குழந்தைகளை கூட பார்க்க முடியவில்லை.

இப்படி எண்ணற்ற சவால்களை ராமர் தனது வாழ்வில் சந்தித்தார். ஆனால், எந்த சூழலிலும் ராமர் தனது சமநிலையை இழக்கவில்லை. எத்தகைய துன்பமான நிகழ்வுகள் நடந்த போதும் அவர் கோபம் கொள்ளவோ, வெறுப்படையவோ இல்லை. மற்றவர்களை பழிவாங்கவும் எண்ணவில்லை.

அதற்கு பதிலாக, தனது எதிரியை கொலை செய்ததற்காக இமயமலைக்கு சென்று ஒரு வருடம் பிராயச்சித்தம் மேற்கொண்டார். இவற்றையெல்லாம் தாண்டி, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மக்கள் நன்மைக்கு எது தேவையோ, அதை மட்டுமே ராமர் செய்தார்.

இந்த தன்மை தான் இப்போது நம் நாட்டிற்கும் உலகிற்கும் தேவை. நமக்கு தலைவர்களாக இருப்பவர்கள் ராமரை போல் இருக்க வேண்டும். சொந்த குடும்பத்தை தாண்டி ஒவ்வொரு குடி மக்களின் நன்மைக்காகவும் செயல் புரியும் தலைவர்கள் நம் உலகிற்கு தேவை. இது சாத்தியமானால் அன்பான, அமைதியான மற்றும் ஆனந்தமான உலகை நம்மால் உருவாக்க முடியும். எனவே, ராமருக்கு பூஜை செய்வதுடன் சேர்த்து அவருடைய தன்மையையும் நமக்குள் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.