

பாஜகவில் நீண்டகாலம் இருந்த சத்ருகன் சின்ஹா முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் செல்லப்பிள்ளையாகவே இருந்தார்.
மோடி – அமித்ஷா கூட்டணி ஆட்சியைப் பிடித்த பிறகு சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பிரபல தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். யஷ்வந்த் சின்ஹாவைத் தொடர்ந்து சத்ருகன் சின்ஹாவும் பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் அசன்சால் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
பாஜக எம்.பியாக இருந்த பபுல் சுப்ரியோ கட்சித் தலைமையிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது. அதில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். பபுல் சுப்ரியோ பாலிகஞ்ச் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை மே.வங்க அமைச்சரவையில் அமைச்சர் ஆக்கும் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. தன்னுடைய ஸ்டைல் குருநாதர் என்று சத்ருகன் சின்ஹாவை ரஜினிகாந்த் குறிப்பிடுவார். இருவரும் இணைந்து அஸ்லி நக்லி (அசலும் நகலும்) உள்பட சில இந்திப்படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
