தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக தலைமையால் 82 மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கலந்து கொண்ட காணொலி காட்சி கூட்டம் நேற்று (மார்ச் 10) நடைபெற்றது. சென்னை அதிமுக தலைமையகத்தில் இருந்து இந்த கூட்டத்தை முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மட்டுமில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசல் குறித்து கண்டித்து பேசினார். விருதுநகரில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு தெரியாமல் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனி ஆவர்த்தனம் நடத்துவதால் கட்சியில் குழப்பம் ஏற்படுவதாக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி,ராஜேந்திரபாலாஜி மரியாதை நிமிர்த்தமாக இன்று நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம், விருதுநகரில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உட்கட்சி பூசல்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது கட்சி விதிகளை மீறி செயல்படும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது