• Mon. May 13th, 2024

கோவை லாட்டரி அதிபர் வீட்டில் தொடரும் ரெய்டு..!

Byவிஷா

Oct 13, 2023

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறையினர் 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகிலேயே மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இது தவிர கவுண்டர்மில் பகுதியில் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. காந்திபுரம் பகுதியிலும் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த 4 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்தது.
இதனை தொடர்ந்து மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் கோவை மற்றும் சென்னையில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள எஸ் எஸ் மியூசிக் அலுவலகம் மற்றும் போயஸ் கார்டானிலுள்ள மார்டினின் மகளின் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் சுமார் 400 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கிற்காக கூடுதல் விபரங்களை சேகரிக்க இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *