• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பட்டினப் பிரவேசத்திற்கு கோட்டாட்சியர் அனுமதி

ByA.Tamilselvan

May 8, 2022

தருமபுரம் ஆதினத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப் பிரவேசத்திற்குவிதித்திருந்த தடையை நீக்கம் செய்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
குன்றக்குடி பொன்னம்பல உள்ளிட்டோர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து, தி.மு.க. ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார். அதை தொடர்ந்து தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 22-ம் தேதி பட்டணப் பிரவேச நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.