காரைக்கால் முதியோர் இல்லத்தை புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் திறந்து வைத்தார்.
ஹீடு இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லங்களில் கிளை காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் காரைக்கால் முதியோர் இல்லம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதனை புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என் திருமுருகன் திறந்து வைத்தார்.
முன்னதாக அமைச்சர் திருமுருகன், மருத்துவர் விக்னேஸ்வரன், நிறுவனர் ராஜா, செயல் இயக்குனர் தீபா ராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அங்குள்ள ஆதரவற்றோர்களை சந்தித்து அமைச்சர் நலம் விசாரித்தார். தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதரவற்றவர்களுக்கு இல்லம் அமைத்து தருவதோடு அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து 23 ஆண்டுகளாக சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் ஹீடு இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.