• Fri. Apr 26th, 2024

பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ByA.Tamilselvan

Jul 25, 2022

பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.
பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் சரியாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.
ஆசிரியர்கள் பள்ளியில் வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஆய்வின்போது செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியிலும் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது. மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டுவருவதை முழுவதுமாக தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும். சினிமா பாட்டு முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு மோதிரம், செயின் போன்றவைகளை கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது. மாணவர்கள் அவற்றை அணிந்து கொண்டு வந்தால், பெற்றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்க வேண்டும். இது போன்று 77 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *