மதுரை மாவட்டம், சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் பணியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சில வருடங்களில் சோழவந்தான் புதிய பேருந்து நிலைய பணியும் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த இரண்டு பணிகளும் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சோழவந்தானில் பேருந்து நிலையம் வட்ட பிள்ளையார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெனகை மாரியம்மன் கோவில் வேப்பமரம் ஆகிய ஐந்து பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில், வெளியூர்களுக்கு செல்லும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வெளி மாவட்டங்களில் இருந்து சோழவந்தான் வந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். தற்போதைய திமுக ஆட்சி அமைந்த உடன் மாவட்ட அமைச்சர் மூர்த்தி, ரயில்வே மேம்பாலப் பணிகளை பார்வையிட்டு மூன்று மாதங்களில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று கூறிச் சென்றார். அதனைதா தொடர்ந்து, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , அடிக்கடி ரயில்வே மேம்பாலப் பணிகளையும் சோழவந்தான் பேருந்து நிலைய பணிகளையும் பார்வையிட்டு விரைவில் இரண்டுமே திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறி சென்ற நிலையில், ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை ரயில்வே மேம்பாலமும் சோழவந்தான் பேருந்து நிலையமும் திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களிடையே மிகுந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும், அரசியல் கட்சிகள் எங்களுக்கு வாக்களித்தால் சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையங்களை திறப்போம் என வாக்குறுதி கொடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே வாக்குறுதியை அரசியல் கட்சிகள் மீண்டும் பொது மக்களிடம் கொடுத்தனர் .
இந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையங்கள் திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .
மேலும், ஒரு சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மீண்டும் இந்த வாக்குறுதிகள் தேர்தல் வாக்குறுதிகளாக மாறுமோ என, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஆகையால் ,இதனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் மற்றும் மேம்பாலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பேருந்து நிலையம் திறக்காததால், சோழவந்தான் நகருக்குள் வந்து செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் நிற்பதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்வதற்கு அங்கும் இங்கும் அலைய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தற்போதைய மேம்பாலத்திற்கு அருகில் வாடிப்பட்டி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பற்ற நிலையும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளதால், பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென, சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.