தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண் 21க்கு உட்பட்ட புத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

இப்பகுதியில் உள்ள புத்தேரி என்பது சுமார் 10.48 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் முயற்சியால் இந்த ஏரி தூர்வாரி சீரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த நீர்நிலையை மூடி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தனியார் கல்வி நிறுவனம் நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளை ஆக்கிரமித்து நுழைவுவாயில் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கல்லூரி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
கல்லூரிக்கு வரும் வாகனங்கள் பொதுச் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரேடியல் சாலை பகுதியில் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு தலைமைச் செயலகம், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மனுக்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தனியார் கல்வி நிறுவனத்திற்கு உடந்தையாக உள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
புத்தேரி போன்ற நீர்நிலைகளை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களை தீர்க்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



