மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகரில், ரூபாய் 40 லட்சம் மதிப்பில் போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தை கணக்கு காட்டுவதற்காக, ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள தரமான சிமெண்ட் சாலையை பெயர்த்து சாலை அமைக்க முயன்ற பேரூராட்சி அதிகாரிகளுடன், அப்பகுதி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் சாலை வசதி இல்லாததால், கனமழையில் சேறும் சகதியுமாக மாறி பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
,குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாலை வசதி இல்லாத தெருக்களைப் புறக்கணித்துவிட்டு, ரூபாய் 40 லட்சம் மதிப்பில் போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தை கணக்கு காட்டுவதற்காக, நல்ல நிலையில் உள்ள தரமான சிமெண்ட் சாலையை குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பெயர்த்து தெருச்சாளையை சேதப்படுத்தும் வேலையை பேரூராட்சி நிர்வாகமும், ஒப்பந்ததாரர்களும் ஈடுபட்டனர்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள், சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தினர்.
மேலும், தரமான சாலையை இடித்து அந்த மண்ணை அள்ளி தனிநபருக்கு விற்பனை செய்யும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டி, அங்கிருந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் காவல்துறையினர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இனியும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடாமல், சாலை வசதி இல்லாத மண் சாலைகளை கண்டறிந்து அங்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் மற்றும் குடிநீர் குழாய் இல்லாத பெருக்களுக்கு புதிய குடிநீர் குழாய் உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்

கடந்த நான்கு ஆண்டுகளாக பரவை பேரூராட்சி செயல் அலுவலர் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனவும் பொது மக்களிடம் குறைகளை கேட்க கூட அதிகாரிகள் வராத நிலையில் தற்போது புதிதாக போடப்பட்ட ஒப்பந்த தொகை ரூபாய் 40 லட்சத்தை செலவு செய்யும் நோக்கத்தில் கணக்கு காண்பிப்பதற்காக பணியாளர்களை அனுப்பி நல்ல நிலையில் உள்ள தெருசாலையை சேதப்படுத்தி சென்றது அங்குள்ள பொதுமக்களை கடும் ஆத்திரம் அடையச் செய்தது


