சோழவந்தானில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகருக்குள் வந்து செல்லும் பொதுமக்களால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சோழவந்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்திற்கு நெருக்கடியாக ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தொடர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.


சோழவந்தானில் பெரிய கடை வீதி முதல் பேருந்து நிலையம் வரை உள்ள சாலையை ஒருவழி பாதையாக மாற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து துறையினர் காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலை துறையினர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக பெரிய கடை வீதியில் இருந்து மூலக்கடை முத்துக்குமரன் நகை மாளிகை வழியாக மார்க்கெட் ரோடு அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் செல்லும் சாலையானது மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில் எதிரெதிரே வாகனங்கள் வரும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதன் காரணமாக அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாகன ஓட்டிகள் மற்றும் அரசு போக்குவரத்து பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இதன் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். சில இடங்களில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய நிலையும் ஏற்பட்டு வருவதாக கூறும் போக்குவரத்து துறை பணியாளர்கள் இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர்.

ஆகையால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெரிய கடை வீதி முதல் பேருந்து நிலையம் வரை உள்ள சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றி போக்குவரத்திற்கு சிரமம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




