• Tue. Nov 17th, 2026

கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளால் சுவாச கோளாறு ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம்..,

ByKalamegam Viswanathan

Nov 17, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ரயில் நிலையம் செல்லும் சாலை ஓரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் அந்தப் பகுதியில் செல்பவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் அதில் தீ வைத்து செல்வதன் மூலம் ஏற்படும் விஷத்தன்மை உடைய புகையானது காற்றில் பரவி அதை சுவாசிக்கும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறுகின்றனர் மேலும் விஷத் தன்மை கலந்த மருத்துவ கழிவுகளை எரிப்பதன் மூலம் அதன் விஷத்தன்மை உடைய புகையானது காற்றில் கலந்து அதை சுவாசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றத்துடன் கூடிய மருந்து வாடை வீசுவதாகவும் கூறி செல்கின்றனர்.

அதாவது செல்லகுளம் பெருமாள் பட்டி கரட்டுப்பட்டி மேல் நாச்சிகுளம் பொம்மன் பட்டி நரிமேடு கோட்டைமேடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொட்டப்படும் குப்பைகளில் காலாவதியான மருந்து மாத்திரைகள் ஊசிகள் உள்ளிட்டவைகள் இருப்பதால் அதை எரிப்பதன் மூலம் அதிலிருந்து வெளிவரும் நச்சுத்தன்மை கலந்த புகையானது விஷத்தன்மை உடையதாக காற்றில் கலந்து பொதுமக்களுக்கு பெரிய அளவில் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி இதுபோல் கழிவுகளை கொட்டி செல்வதால் ஆங்காங்கே பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகமோ நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோ சுகாதாரத்துறையோ கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

உடனடியாக வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல் செல்லக்கூடிய முக்கிய சாலையில் வாடிப்பட்டி ரயில் நிலையம் செல்லும் பாதையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அதற்குரிய பாதுகாக்கப்பட்ட இடங்களில் கொட்டி பொதுமக்களுக்கு தொற்றுநோய் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.