உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை முடிவு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும், சிறப்பு பணிப் பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதுமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான வருவாய்த்துறை அலுவலர்கள், இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து வருவாய் வட்ட மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உசிலம்பட்டி வட்டார அளவிலான 100 க்கும் அதிகமான வருவாய்த்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய்த்துறை சங்கங்களும் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் முகாம் நடத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.